முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் ஏழை உழவன் ஒருவன் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். தினமும் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுள்ளவன். நாள்தோறும் இறைவனிடம் அவன், "இறைவா! வறுமையில் வாடும் நான் வளம் பெற நீ அருள் செய்ய மாட்டாயா?'' என்று வேண்டுவான். கடவுள் மீது திட நம்பிக்கை உள்ளவன்.
ஒருநாள் அவன் நிலத்தை உழுதுவிட்டு வரப்போரம் நடந்தான். வரப்பருகே இருந்த மரத்தின் கீழ் இருந்த ஒட்டியிருந்த முட்புதர் அவன் அணிந்திருந்த உடையைக் கிழித்துவிட்டது. "என்னிடம் இருப்பதே இந்தக் கந்தல் ஆடைதான். அதையும் இந்த முட்புதர் கிழித்துவிட்டதே....? என்று நினைத்து மேலும் அவ்வண்ணம் நிகழாதிருக்க முட்புதரை மண்வெட்டியால் வெட்டி அப்புறப்படுத்தினான்.
அப்பொழுதுதான் புதருக்குள் இருந்த பெரிய பித்தளைப் பாத்திரம் அவன் கண்களுக்குத் தெரிந்தது. வியப்படைந்த அவன் அதைத் திறந்து பார்த்தால் உள்ளே ஏராளமான பொற்காசுகள் மின்னிக்கொண்டு இருந்தன.
"என் வேண்டுதலைக் கேட்டுக் கடவுள் அருள் புரிந்தது உண்மையானால் இதை நான் வீட்டிற்குக் கொண்டு செல்ல மாட்டேன். அவரே கொண்டு வந்து வீட்டில் வைக்கட்டும். நான் எடுத்துக் கொள்கிறேன்'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
அவன் சென்றவுடன் அந்தப் பானையினுள் நிறைய்ய தேனீக்கள் சேர்ந்து விட்டன. காரணம் அருகிலிருந்த மரத்தின் தேன்காய்கள் அந்தப் பாத்திரத்தினுள் விழுந்ததுதான்! ஏராளமான தேனீக்கள்!
நடந்ததை எல்லாம் தன் மனைவியிடம் கூறினான். அவனுடைய முட்டாள் தனத்தைக் கண்டு அவளுக்கு வருத்தமாகவும், வேதனையாகவுமிருந்தது. ஆனால், கணவன் என்ன புத்திமதி சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று நினைத்தாள் அவள்.
கணவன் நன்கு உறங்கியதும் அவள் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டினாள். பக்கத்து வீட்டுக்காரியும் அவள் கணவனும் கதவைத் திறந்தனர். "அவர்களிடம் நடந்ததை எல்லாம் சொன்ன அவள், இப்பொழுதே நாம் மூவரும் சென்று அந்தப் புதையலைக் கொண்டு வருவோம். ஆளுக்குப் பாதிப் பாதி எடுத்துக் கொள்வோம்'' என்றாள்.
புதையல் முழுவதையும் அடைய வேண்டும் என்று நினைத்த பக்கத்து வீட்டுக்காரி, "நள்ளிரவாகிவிட்டது. வெளியே திருடர் நடமாட்டம் இருக்கும். இப்பொழுது செல்வது நல்லது அல்ல. நாளை பகல் நேரத்தில் சென்று யாருக்கும் தெரியாமல் அதைக் கொண்டு வந்து நாம் பிரித்துக் கொள்ளலாம்!'' என்றாள்.
சரி! நாளைக்குப் போகலாம்! என்று கூறிவிட்டு உழவனின் மனைவியும் வீடு திரும்பினாள்.
சிறிது நேரம் சென்றது. பக்கத்து வீட்டுக்காரியும் அவள் கணவனும் அன்றிரவே புதையல் இருக்கும் இடத்தை அடைந்தனர். ஆர்வத்தினால் அதைத் திறந்தான் கணவன். உள்ளே உள்ள பொற்காசுகள் தெரியவில்லை. அதற்குள் இருந்த ஏராளமான தேனீக்கள் அவர்களைக் கொட்டத் தொடங்கின. அதைப் பரபரப்புடன் மூடிய கணவன் "இந்த இரவு நேரத்தில் அவள் நம்மை ஏமாற்றி இருக்கிறாள். இதற்குள் புதையல் இல்லை. ஏராளமான தேனீக்கள்தான் உள்ளன. நாம் பட்ட அனுபவத்தை அவர்களும் படட்டும். இந்தப் பாத்திரத்தை அவர்கள் வீட்டில் வைத்து விடுவோம்!'' என்றான். இருவரும் அதைச் சுமந்து வந்து உழவனின் வீட்டில் வைத்தனர்.
அதிகாலையில் விழித்த உழவன் புதையல் பாத்திரத்தைத் தன் வீட்டில் பார்த்தான். அதிலிருந்த தேனீக்களும் பறந்து விட்டன. உள்ளே பொற்காசுகள் மின்னின. அவனால் கடவுளின் அருளை வியக்காமல் இருக்க முடியவில்லை.
Comments
Post a Comment