புற நகரில் தனியாக இருக்கும் வீடுகளில் கொள்ளையர்கள் நுழைந்து தாக்கி கொள்ளையடித்துச் செல்லும் சம்பவங்களைப் பற்றி தினசரியும் படித்தும், பார்த்தும் கடக்கும் நமக்கு அதன் பின்னணியில் இயங்கும் மிகப் பெரிய நுட்பமான நெட் வொர்க்கையும், இரக்கமற்ற அந்த மனிதர்களையும் அறிமுகம் செய்வதோடு.. அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள், ஏன் இப்படி இருக்கிறார்கள் என்கிற அவர்களின் வரலாற்றின் பின்னணியையும் பள்ளிக் குழந்தைக்கும் புரியும்படி படம் போட்டு பாகம் குறித்து விளக்கியிருக்கிறார்கள்.
மிகவும் அடர்த்தியான சப்ஜெக்ட்டை அந்த அடர்த்தி குறையாமல் திரைக்கதை அமைத்து.. சின்ன சின்ன புத்திசாலித்தனமான காட்சிகளில் நம்மை அந்த வரலாற்றை ஜீரணம் செய்யவைத்து படத்தோடு பயணிக்கச் செய்திருப்பது சல்யூட் அடிக்க வேண்டிய இயக்க வித்தை.
கார்த்திக்கு இது நிச்சயம் மற்றும் ஒரு திருப்பு முனைப் படமாக அமையும். மனிதர் அப்படி உழைத்திருக்கிறார். போலீசின் உடல் மொழி அழகு. வழியும் காதலனாகவும் ரசிக்க வைக்கிறார்.
ஆக்ஷன் காட்சிகளுக்காக மாஸ்டர் திலீப் சுப்பராயனையும், பின்னணி இசைக்காக ஜிப்ரனையும், ஒளிப்பதிவின் வெரைட்டியான நேர்த்திக்காக.சத்யன் சூரியனையும், தனித்தனியாகப் பாராட்ட வேண்டும்.
சமீபத்தில் வந்த இன்னொரு படத்தில் ரசிக்க முடியாத ராகுல் பரீத் சிங்கை இந்தப் படத்தில் ரசிக்க முடிந்ததற்கு அவரின் அழகை அழகாக அடிக்கோடிட்டுக் காட்டி அவரின் பாத்திரப் படைப்பை லவ்லியாக அமைத்திருப்பதே காரணம்.
சும்மா பாராட்டிக் கொண்டே இருந்தால் எப்படி? சில குறைகளையும் சொல்லி விடலாம். படத்தின் நீளம் மிகப் பெரிய பலவீனம். நல்ல துடிப்பான காட்சிகள்கூட அயர்ச்சியை ஏற்படுத்தி திகட்ட வைக்கிறது. குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்கும்போதே முக்கால் படம் கடந்துவிட... அவர்களை விதவிதமாக திட்டமிட்டு மடக்கும்போது... கதையில் எந்தத் திருப்பமும், ஆச்சரியமும் ஏற்படுத்த முடியாமல் போகிறது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கதை அமைத்திருப்பதால் கற்பனை அதிகம் கலக்க முடியாத ஒரு அவஸ்தை திரைக்கதையில் தெரிகிறது. அதனால்... பாலைவிட டிகாஷன் அதிகமாக கலக்கப்பட்ட காஃபியாகி விடுகிறது படம்.
படம் பார்த்து முடிக்கும்போது..
படம் பார்த்து முடிக்கும்போது..
தமிழக காவல்துறைக்கு ஒரு பெரிய சல்யூட் வைக்கத் தோன்றுகிறது.
சாதனையாளர்களுக்கு உரிய மரியாதை உயரதிகாரங்களில் இருப்பவர்களால் கொடுக்கப்படாத அசிங்கமான நிதர்சனத்திற்காக சம்மந்தப்பட்டவர்களுக்கு ஒரு குட்டு வைக்கவும் தோன்றுகிறது
Comments
Post a Comment