ரசிகர்கள், அரசியல்வாதிகள், இணைய போராளிகளை பரபரக்க வைத்த ரஜினியின் பேச்சு - முழுமையாக!


ரசிகர்கள், அரசியல்வாதிகள், இணைய போராளிகளை பரபரக்க வைத்த ரஜினியின் பேச்சு

இன்றைய ரசிகர் சந்திப்பில் ரஜினியின் பேச்சுதான் ஹைலைட். இதுவரை யாரும் பார்த்திராத பளிச் பேச்சு. மிக இயல்பாக, தனக்கே உரிய ஸ்டைலில் ரஜினி பேசியிருந்தார். அதில் ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை, அறிவுரை இருந்தது. அரசியல்வாதிகளுக்கு ஒரு குறிப்பு இருந்தது. அவரது அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு யூகங்களுக்கான வாய்ப்புக்கும் இடமிருந்தது.
ரஜினியின் பேச்சு முழுமையாக:
மதிப்பிற்குரிய இயக்குநர் எஸ். பி. முத்துராமன் என்னுடைய இன்னொரு சகோதரர். எனக்கு சென்னையிலிருக்கும் சத்தியநாராயணா கெய்க்வாட். அவர் என் மேல் காட்டிய அக்கறை, அன்பு, அவர் எனக்கு கத்துகொடுத்து பாடங்கள் பல. அவரிடமிருந்து நான் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டேன். சினிமா துறையில் அவரை போல நேர்மையான மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை. என்னை எஸ்பிஎம் எப்போது மீட் பண்ணாலும் என்னிடம் சொல்வது இரு விஷயங்கள்.. 'ரஜினி உடம்பைப் பாத்துக்க... அடுத்து ரசிகர்களைச் சந்தித்து போட்டோ எடுத்துக்க' என்பதுதான். அவர் சொன்ன மாதிரியே இந்த நிகழ்வு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில் தான் நான் முத்துராமன் அவர்கள் படத்தில் முதன்முறை கதாநாயகனாக நடித்தேன். அந்த படத்தில் அவரால் பஞ்சுவாலிட்டியை கற்றுக் கொண்டேன். அந்தப் படத்தில் நடித்த போது, சொல்ல வெட்கமாக இருக்கிறது, எனக்கு குடிப்பழக்கம் எனும் கெட்ட பழக்கம் இருந்தது. அதனால் என்னால் நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வர முடியவில்லை. தொடர்ந்து மூன்று நாட்கள் அப்படிப் போனேன். ஒரு நாள் எல்லாரையும் அனுப்பிவிட்டு, ஏவிஎம் ஸ்டுடியோவில் எஸ்பிஎம் என்னிடம், 'இதோ பார் ரஜினி... இப்போது நீ ஹீரோ. ஒரு ஹீரோ சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்தால்தான், மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் எல்லாரும் நேரத்துக்கு வருவார்கள்.. அதனால நீ முதல்ல ஷூட்டிங்குக்கு வந்துடு,' என்றார். அதன் பிறகு நான் தாமதமாக படப்பிடிப்புக்குச் சென்றதில்லை. எனது வழிகாட்டியாக இருப்பவர் எஸ்பிஎம் சார். 12 வருசமாச்சு உங்களை முறையாகச் சந்தித்து. முதல்ல எல்லாம் படங்களின் வெற்றி விழாவில் சந்திப்போம். எந்திரன் நல்லபடியா போச்சு. ஆனா வெற்றி விழா கொண்டாட முடியல. அதன் பிறகு கோச்சடையான் போன்ற பிரச்சினைகள். இப்போ கபாலி நல்லா போச்சு. ஆனா சில விஷயங்களால கொண்டாடல. அததை அந்த நேரத்துல செஞ்சாதான் நல்லாருக்கும். முதலில் நடக்க இருந்த சந்திப்பு ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. அடுத்த படங்களுக்கான வேலைகளில் சந்திப்பை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை. இப்போ ஏற்பாடு பண்ணியிருக்கோம். அதே சமயம், இலங்கை செல்ல பயணத்தை ரத்து செய்த பொழுது சில ஊடகங்களும், சிலரும் நான் பின் வாங்கிவிட்டது போல் பேசினார்கள். ரஜினி முடிவு எடுக்க திணறுகிறார், மைன்ட் சேஞ்ச் பண்ணிக்கிட்டே இருக்கார் தயங்குகிறார், பயப்படுகிறார் என்றார்கள். எழுதினார்கள். நான் எந்தவொரு முடிவு எடுக்கும் போதும் நான் என்னளவில் தீர யோசிப்பேன். நல்லா சிந்திச்சு முடிவு எடுக்கணும்னு நினைப்பேன். சில விஷயங்களில் நாம் முடிவு எடுத்த பிறகு அதில் பிரச்சனைகள் இருப்பது தெரியும். அதுபோன்ற தருணங்களில் நாம் கண்டிப்பாக சிந்திக்க வேண்டும். தண்ணீரில் கால் வைக்கிறோம். கால் வைத்த பிறகு தெரிகிறது உள்ளே நிறைய முதலைகள் இருக்கின்றன என்று. எடுத்த வைத்த காலை பின்னால் எடுக்க மாட்டேன் என்று சொன்னால் என்ன ஆகும். எடுக்கணும். முரட்டு தைரியம் இருக்க கூடாது. பேசுறவங்க பேசிக்கிட்டேதான் இருப்பாங்க.

Comments